Thursday, April 28, 2011

ஊமை வெயில்


குற்றேவல் சேடியாய்
வந்து போனது மழை
மரத்தின் நிழல்வெளி செருப்பும்
நனையாமல்

ஊடல் மனைவியின்
கோணல்ப் பிறை முதுகை தீண்ட நீட்டி
திரும்பிய  விரல்களின்
தயக்கத்துடன்

மின் விசிறி நாவு மேவிய தூசாய்
விரிசிறகு மட்டும் நிறம் அடர்ந்த பறவைகள்

எடுத்து விட்ட விரலை  மீண்டும் வைத்துக்
கொள்ளும் தூக்கக் குழந்தையாய்
இரண்டு நாள் மட்டும் தள்ளிப் போன
சந்தோஷம்

படம் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்து கூரை ஓவியம்   

Sunday, April 24, 2011

தேகம்


ஓவியத் தாள்களை கணப்பு அடுப்பு
தின்னக் கொடுத்தாயிற்று அதிலிருந்து கசியும்
வர்ண வாசனை மரத்துப் போக  புகைத்தபடி

உறை பிரிக்காமல் நடுங்கும் கரத்துடன்
எதிர்வீட்டு இளைஞனுக்கு கொடுத்துவிட்டு
அனுமதியோடு விரல் பதிய அறைந்தேன்
நன்றியும் செத்துப் போக
இராவண வயலின்

காப்பீட்டு பத்திரங்களையும்
கத்தரித்த கூந்தலையும்
நாப்கின்னோடு வீசியாயிற்று

சப்தங்களில் இருந்து தப்பிக்க
எப்போதும் கூடுவதில்லை
நீருள் மூழ்க
அரிந்து வீசிய கருப்பை போலும்

ஏது செய்ய
புணர்ந்த தேகத்தை... ?

Friday, April 22, 2011

பால்ய நகரம்

குடிக்கூலி தவணையுள்ள
வீடுகளைப் போலவே 
விபத்துகளின் உதிரஞாபகமும்

ஆல்கஹால் இரவில் தையல் கிழிந்த
வயிறாய் 
உலோக நகம் திறந்தபடியே
இருந்த ஆறும் காயத்தின் கருப்புள்ள
சாலைகள்

எஸ்.டி.டி பூத்துகளில் முடிந்த
பண்டிகை நாட்கள்

மாத இறுதி கையிருப்பில்
இருக்கும் கிழிந்த நோட்டாய்
காதல்

ரிக்டரளவு மீறிய நாளின் 
மீன்தொட்டியாய்
இன்னும் நடுங்கும்
ஜன்னல்வழி பார்த்த கொலையிரவு

பெயர்க்கப்பட்ட வீட்டின் ஜன்னல் சட்டத்தில்
சாயமற்று கிடக்கும் யாரோவின்
ஸ்டிக்கர் பொட்டு 
இன்னும் மீதமிருக்கும்
நங்கூரங்களின் புன்னகை



(என்றைக்குமான அன்புடன் க.அன்புவேலுக்கு)

Monday, April 18, 2011

செய்தி வாசிப்பாளினியும் அஜினோமோட்டோ முத்தங்களும்


கொதிகலன் மூழ்கிய பிராய்லர் கால்களாய்
விசிறிகளசையும் காற்றாலைக் கரையில்
கடற்பஞ்சு தைத்த உள்ளாடைகள் மீது
உதடு கவ்விய ப்ளாஸ்டிக் தும்பிகள்

அலைக்கற்றை ஈந்த ப்ளாக்பெர்ரி கனியின்
டங்ஸ்டன் நார்கள் நீலப்பல்லிடுக்கில்,
பர்கர் இடைவேளையில் தோற்கும்
சந்திராயன்

கொக்கோ விவசாயி
மலங்கழிக்க இரண்டு கிலோ
அரிசி அல்லது இரண்டு நிமிட
செல்போன் ஊனம்

விந்தை மட்டும் விலை தந்து பெறும்
இலவச ’காலனியர்’ பரந்துள்ள ஊரில் 
நைட்டி(ங்)கேல் சாமியார்
சமாதி நிலை வகுப்பெடுக்கிறார்

லேகிய வியாபாரியின் மூலிகைக் கனவில்
காளான் பண்ணை

Thursday, April 14, 2011

அக்கா...!

          இன்று நெருங்கிய உறவினரின் மரணம் நிகழ்ந்தது.அக்கா ,அக்கா என்று சுற்றிச் சுற்றி அதே நினைவு.மயானம் வரை வசமிழந்த கண்கள் .வெகு உற்சாகமாக துவங்கிய நாள் பேரதிர்ச்சியுடன் முடிந்தது 38 வயதெல்லாம் சாகும் வயதா :(

            2ஆம் ஆண்டு பொறியியல் பயிலும் அவர் மகனை அழச் சொல்லிக் கெஞ்சினேன் ,வெறித்த பார்வையுடன் மாலை வரை துளிக் கண்ணீரும் சிந்தாமல் கிடந்தவன் தன் பால்ய சிநேகிதன் வந்து நம்ம அம்மாவுக்கு என்னடா ஆச்சு என்றதும்... வெடித்து உடைந்தான்.மிக மோசமான பாதுகாப்பின்மையை மரணங்கள் மனிதரிடையே பரவ விடுகின்றன,இனி சகலரையும் நேசிக்க மட்டுமே வேண்டும் என்றும்

                       பெருவெளியில் நிரந்தரமாக கலந்து விட்டது இன்னொரு வெளிமூச்சு,எல்லா தத்துவங்களும் அத்துணை தேற்றுதல்களும் ஒரு விசும்பலில் துகள்களாகித் தெறிபடுகின்றன.தன் முன்னிருந்த அத்துணை சாத்தியங்களையும் முயன்று வெற்றுடலை சுமந்து வந்த அந்த மனிதன் ஒரே இரவில் தொழிலால் 65 லட்சம் இழந்தவன்,தொடர்ந்த வருடங்களில் தகப்பனையும் தாயையும் ...4-5 வருடங்களுக்குள் அத்தனையும் .. இனி அந்த வீட்டில் பகல்களில் வரும் பூனைகள்... முதல் கவளச் சோறுண்ண வரும் மொட்டைமாடி காகங்கள்... அந்த தென்னை மரத்தின் கீழ் சிதறிய பருக்கைகளுக்கு வரும் அணில்... எம்புட்டு தின்னுரப் போகுதுக .வெரட்டாத ஆத்தா என்று காயும் தானியங்களுக்கு வரும் குருவிகளுக்கு யார் கொள்ளுவார் கரிசனம்...

               சாப்பிடும் பொழுதுவரை பேச்சை நகர்த்தும் லாவகம் அறிந்திருந்தாய் அக்கா . உனக்கு மட்டுமே தயாரித்து ஒரே பாண்டத்துடன் தீர்ந்து போனாற் போன்ற வேறெங்கும் காணா குட்டிக்குட்டி கிண்ணங்கள்.எப்போது மோர் வரும் என்று காத்திருக்க வைக்கும் வீடு உனது.உணவை இத்துணை நேசித்துப் பரிமாறும் வீடுகள் அரிதினும் அரிது அக்கா.எனக்கு நீதான் பெண்பார்த்தாய் .இந்த மரணம் உன் வாதைகளில் இருந்து நீ கொண்ட விடுதலை என்பதில் ஒரு மெல்லிய ஆசுவாசம் படரத்தான் செய்கிறது.இறந்த தம்பியின் மனைவிக்கு தாயின் இடத்தில் இத்துணை வருடங்களுக்குப் பின்னும் நீண்டபடிதான் இருந்தது கரம் அந்த சிறுமிக்கான நகைகளை சேமிக்கத் துவங்கி இருந்தாய்.ஒவ்வொரு முறை அயல்தேசம் கிளம்பும்போதும் வரும்போதும் சொல்லிக் கொள்ள எடுத்துக் கொள்ள உன் வீட்டு வாகனம் நின்று கொண்டிருக்கும். அக்கா ... இடம் மாற்றும் போது சுமக்க நேர்ந்திருக்க வேண்டாம் அக்கா.உன் முகம் இது வரை பார்த்தே இராத சௌந்தர்யப் புன்னகையுடன் ஒளிர்ந்தது.என் கவிதைப் புத்தகத்தை நீ வாங்கிப் போன அந்த மாலையில் மீண்டும் உன் கண்களில் பால்யத்தை பார்த்ததைப் போலவே ...

          ஒவ்வொரு வருகையிலும் என் வீட்டு பதனப் பெட்டியை நிரப்பிப் போவதில் துவங்கி என் வரவறிந்து சமைத்தனுப்பும் நாட்களும் இனி ....
உனது வாக்கியங்களை அப்படியாமே ? என்று துவங்கும் லாவகம்.. பிறகு என்று உரையாடலை நீட்டுவிக்கும் சொல்லோடு நீ தரும் மௌனம் ... எங்களுக்கும் விளங்குற மாதிரி அடுத்து வர்ற புஸ்தகம் இருக்கணும் .சரியா .. ? என்று கேட்ட குரலின் தண்மையும் ஒரு புறம் சாய்ந்த பார்வையும் .அக்கா ! உன் மகனிடத்து வாக்களித்ததைப் போலவே அவனது தேவைகளில் என் இருப்பு நிச்சயம் இருக்கும்.இனியான என் சொற்களில் நின் நினைவுகளும்

            அழுது வீங்கிய கண்களுடன் அடர்ந்த கனவில் இருந்து அக்கா,இப்போ அக்கா என்கிற என் மனையாளின் சிலிர்த்து விழித்த நிமிடம்தான் அக்கா நீ விட்டுப் போயிருப்பது,நீ இல்லாத வீட்டிற்குள்  நுழையும் திராணி குறித்த என் நடுக்கமும்.உன் வீட்டில் இருக்கும் உன் மகனின் இரவுணவு முடிந்ததென்ற சேதி சொல்லும் என் அம்மாவின் அன்பும் ..நீர்த்திரை கட்டும் இந்த கண்கள் எழுத விடாமல் இம்சிக்கின்றன அக்கா.சிறு வயதில் நீ ஒளிந்து கொண்டால் மட்டும் கண்டு பிடிக்க முடிந்ததே இல்லை அக்கா.நீ போர்வை போர்த்தி கட்டிலுக்கு கீழ் அல்லது உறங்கும் யாரேனும் அருகில் இருப்பாய்.கண்டறிய இயலாமலே முடிந்து விடும் விளையாட்டு,இன்றும்.....

உன் ஆன்மா அமைதியில் ஆழ்க!நீ ஸ்தூலமாய் வாசிக்கக் கூடும் என்ற அசட்டு நம்பிக்கையுடன்...

Tuesday, April 12, 2011

கடவுச் சொற்கள்

ரேகையழிந்த கரங்களால்
தொடுதிரையில் தெரியும் பெண்ணை
திறந்து பார்ப்பதால் திருப்தியுறுவதில்லை
நடிகை/கன் நினைந்து மனையாள் பிணைந்து
தோற்கும் உடல்

வேண்டியிருக்கிறது திருடப்பட்ட உள்ளாடைகள்
வேண்டியிருக்கிறது மார்பிங் நிர்வாணங்கள்
வேண்டியிருக்கிறது திரையரங்க இருட்டு
வேண்டியிருக்கிறது நெரிசல் பேருந்துகள்
வேண்டியிருக்கிறது கடவுளர் கொண்டாட்டங்கள்
வேண்டியிருக்கிறது தாய் சாயலில் தாசியர்
வேண்டியிருக்கிறது யாசிக்கும் திருநங்கையர்
வேண்டியிருக்கிறது தற்கொலைத்த புகைப்படங்கள்
வேண்டியிருக்கிறது திசை தப்பிய சிறுமிகள்
வேண்டியிருக்கிறது பரிசோதனைக்கு வரும் பிரேதங்கள்

மற்றும்

சித்திரம் வரைந்த கழிவறைகள்
ஒட்டுக் கேட்க முடிகிற தொலைபேசிகள்
ஒருக்களித்த ஜன்னல்கள்
சித்தரித்துக் கொள்ள ஏதுவாய்
தகப்பனோடேனும் பேசிய மின்னுரையாடல்கள்

இச்சித்தும் அனிச்சையுமாய்

நேர்ந்து விடுகின்றன வல்லாங்கப் படுதல்
நேர்ந்து விடுகின்றன கருக்கலைப்புகள்
நேர்ந்து விடுகின்றன பிரிவறிக்கைகள்
நேர்ந்து விடுகின்றன உந்தப் பட்ட மரணங்கள்

ஒரு போதும் கூடுவதில்லை

மெய்நிகர் மெய்யாகவும்
விந்து கருவாகவும்
ஆதலால்
தம் பிள்ளைளை தமதாகவும்
தாமே தமதாகவும்

சாமர்த்தியமாக எழுதப்பட்ட
கடவுச்சொல்லாய்
எண்களாலும் சொற்களாலும்
ஆன உடலை
எரித்துக் கொள்கிறார்கள்
மிக ரகசியமாக

நைந்த உறை
கிழிந்ததறியாமல் நோய்கண்ட
உடல் கூடும்
நிழலாக

(நன்றிகளுடன் அனானிகளுக்கு ...)