Wednesday, July 13, 2011

உனக்கு எப்படி புரிய வைப்பது

நீ தட்டானாகி அமர்ந்து
சிறகு குவிக்கும் புல்
உன்னைப் புதைத்த கல்லறை

நீ புகட்டி வளர்த்த கனவுகள்
உனக்கெதிரான சாபங்களாய்
செல்பேசி எறிந்து 
பேட்டரிகளாய் கழன்று கொண்டிருக்கின்றன 

உனது புகைப்படத்தின் ஓரங்கள்
பழுப்பேறி விட்டன 
உனக்குத்தெரியுமா
நீ போற்றி மறைத்த நரை
தெள்ள வெளுத்த தருணக் காட்சியுடைய 
படம் அது 

உனக்கு எப்படி புரிய வைப்பது 
நீ இறந்து விட்டாய்

வாழ்வைப் பிணை வைத்த
ஒரு நம்பிக்கை பொய்க்கும் போது
இல்லாமலே மரிக்கும் கடவுளைப் போல 

போல போன்ற எல்லா போலகளும்
அழிந்து விடும்
விற்கப்பட்ட சிறுமியின்
பிறப்பைப் போல 

ஒரு ஆழ்ந்த காயத்தின் 
தையலாய் 
பிரிக்கப் பட்டு விட்டாய் 
நீ 

உனக்கு எப்படி புரிய வைப்பது 
அதன்பின் நானும் இரண்டு முறை 
இறந்து விட்டதை

( என்றும் )


அல்லது ..

இந்த கிரகம் இனி நமதல்லவென்பதை 

( என்றும் )

கழிவறைக் கூடையில் 
உன் அதீத அன்பு கருமையேறி 
வில்லைகளால் பின்னமுற்ற நாளில் 

( விரும்பியவாறு வாசித்து முடிக்கலாம் தலை கீழாய் எழுதப்பட்ட இந்தக் கவிதையை.. ) 

:)