Sunday, November 13, 2011

அது ....!

கொஞ்சம் தவிட்டு வாசம் 
மீதமுள்ள
பதனிடப் பட்ட தோலுறையில் 
இருந்து உருவுகிறீர்கள் 
கழுவப் பெற்ற குழந்தையின் 
ஈரக் குழல் போல் மின்னுகிறது 
அது...

குற்றங்களை பட்டியலிடுகிறீர்கள் 
மேதமை மிளிரும் 
உங்கள் மொழியில் ,இடையிடையே 
மீசையை நீவிய படி .. 
முன்னால் இருக்கும் மர மேசையில் 
அனிச்சையாய் ஏதோ ஒரு பெயரின் 
தலைப் பெழுத்தை கீறுகிறது 
கூர் நுனி 

மறுதலிப்பதற்கான
ஷரத்துகளின் உட்பிரிவுகள் 
முதற்கொண்டு மனனம் 
செய்த குரலில் ஒப்பிக்க முடிகிறது 
உங்களுக்கு 

தன் பிழையால்
மரித்தவள் கணவனுக்கு 
துளி நடுக்கமும் இல்லாமல் 
ஒரு தேர்ந்த மருத்துவன் 
பதிலுறுக்கும் சாயலில் 

உங்கள் வாக்கியங்களுக்கான
முற்றுப் புள்ளிகளை 
மேசையில் வைத்தபடி தொடர்கிறது 
கம்பளிக்கு வளர்ந்த ஆட்டின் மீது 
நகரும் எந்திரமாய் உரையாடல் 

விசாரணை முடிந்ததென்றும் 
என் பெயர் மரித்தவர் பட்டியலில் 
இணைக்கப் பெற்று விட்டதாகவும் 
எனக்கான உங்களின் நியாயச்சலுகைகள் 
தீர்ந்ததென்றும் அறிவிக்கிறீர்கள் 

உங்கள் உதவியாளரிடம் 
பிரேதப் பரிசோதனை முடிந்து 
ஒப்படைக்கும் உடலைப் போல் 
தீர்ப்பெழுதி கையெழுத்திட்ட கோப்பினை
கையளிக்கிறீர்கள் ,
மீண்டும் உறைக்குத் திரும்புகிறது 
நூற்றாண்டுகளுக்கு முன் உதிரம் 
கண்ட அது 


அறுந்து போயிருந்த மின்சாரம் 
மீண்டும் வருகிறது 
அணைக்க மறந்த விசிறியால் 
அறை மூலை ஒட்டடை அசைகிறது 
அறிதுயிலில் இருக்கிறது 
சிலந்தி அசைவேதுமற்று

2 comments:

Anonymous said...

||மறுதலிப்பதற்கான
ஷரத்துகளின் உட்பிரிவுகள்
முதற்கொண்டு மனனம்
செய்த குரலில் ஒப்பிக்க முடிகிறது
உங்களுக்கு||
||நூற்றாண்டுகளுக்கு முன் உதிரம்
கண்ட அது ||

அருமையான கவிதை.

இரசிகை said...

kadaisi varaikkum athu yethunnu mattum puriyalai sir...

கம்பளிக்கு வளர்ந்த ஆட்டின் மீது
நகரும் எந்திரமாய் உரையாடல்

ithu manasil nikkuthu.

Post a Comment