Monday, March 21, 2011

மற்றும்... ஃ

 சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ
இன்னும் கிளை ஞாபகத்தில்...


பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்
வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள் 
உடல் சொடுக்குகிறது
மகவுண்ட மீன்

சொற்ப தானியங்களுடன் இறுதி நாள்
நுரைப்பஞ்சாய் சாயமுறுகிறது
வரிக்குதிரையின் கருவில் தோல்

பால்மத்திய ரேகையிலிருந்து கிளைக்கும்
நச்சுக் கொடியில் ள்,ன் மற்றும்
அல்லது ஆல்பா,பீட்டா ....


தூக்குக்கு தயார்படும் பரிசோதிக்கப் பெற்ற
உடல்நலத்துடன்..,
காலியாகும் இங்குபேட்டர்களில் இருந்து
ஒரு எளிய பகல்

Thursday, March 17, 2011

செண்பக வனம் - சில குறிப்புகள்

மிருக செட்டைகளின் கீழ் நெளியும்
டங்ஸ்டன் புழுக்களின் ஆய்வுக் கூட மிதவைகள்
திமில் உடைந்து

வெயில் எண்ணிப் பார்க்கும் இலைகளின் 
பாவில் எச்சமிட்டு நட்சத்திரம் பொரிக்கும்
நாகக் கண் வாய்த்த நர்த்தகிக் கொண்டை பறவை

முதலுயிர் நுகர்ந்த பூமியின் பனிக்குட வாசம் பிலிற்றும் 
கடைசியுதிரம் உமிழும் மோனோபஸ் கருப்புதடுகள்
மிளிர சுனை

சமிக்ஞை மெல்லொலி இசைச் சிலந்தி உமிழும் ஒளியிழையில்
வனம் பாலிக்கும் ஏந்தியகரமாய் சிறகு விரித்து மூடும் வதிகுருகுகள்

பேறு காலப்புணர்வில் ஆண் திருடும் தனத்து மிடறாய் 
பாவாத பாதங்கள் தழுவ நீளும் கரங்களோடு 
அவள் நாசி முடிந்து பசியவாயில் வழிந்து 

அரப்பில் சிகைகழுவிய உகிர் ,இலை மேலொளிர் பகல்
யானும் 
பெய்யும் இருதுளியிடை தூரத்தில் 
எம்பாவையரும்

Friday, February 25, 2011

தொப்பி தூக்கிப் பாறை



ஆகாயத்தின் மேல் படிந்திருக்கும்
இமையின் கீழ்

கடைசி சொட்டு மதுவிலிருந்து
அசுத்தமாகும் யாரோவின் உலகம்

நடன எட்டுகள் மறந்த சிறுமியின்
ஆடை அசைப்பில் நிரம்பும் பாடல் கணம்

பணயக் கைதியின் கனாவில்
வரும் மனைவியின் பிரசவம்

என்கௌண்டரில் தரையில்
சுடப்படும் புல்லட்டுகளால்
மூக்கொழுகும் பளிங்கு கோப்பைகள்


நாள் தப்பிய பெண்ணிடம்
சுக விடுதியின் பின்னறை கேள்விகளில்
எச்சில்படும் பெயர்கள்

சர்வ ஜாக்கிரதையுடன் மீண்டும்
 காலி செய்து கவிழ்க்கப் பெறுகிறது
இமை- கோப்பை  மற்றும் ..... 

Thursday, February 17, 2011

வரிக்குதிரையின் கனா

ரீங்கரிக்கும் சில்வண்டுகளின்
ஸ்தாயிதனைஅறுக்கும் கூகையின் குரல் 
அடவியின் இடுக்குகளில்
உறங்கும் சர்ப்பங்களில் நிகழ்த்தும் சலனம் ,

கைவிலக்கும் தாயின் கரத்தை இழுத்து
வைத்துக் கொள்ளும் சிறுமியின்
கனாவில் நடன வகுப்பில்
இறுக்கிக் கொள்ளும் இடையாடை ஞாபகம்.

அதிர்ந்து கொண்டிருக்கிறது செல்லிடப் பேசி,

டோராவும் புஜ்ஜியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
ஆலிஸ் -இன் அற்புத உலகில்
அடுத்த கிரகத்தில் புலம் பெயர்ந்த
தந்தையுடன் தாய்
இன்னும் இறுகும் கரத்துள்
நெளிகிறது பிஞ்சுவுடல்

இராவண கண்ணியம்



கழுவேற்றுதலின் சுவாரஸ்யத்தில் 
இருந்த உனக்கு கேட்கவே இல்லை
மடலேறும் பறை

உண்ணிகள் களைய எப்பவும் நீட்டும் 
கழுத்துதான் 
நீதான் ஆபிரகாம் பலி பீடத்தில் 

கொன்று செய்த பீலி சாமரம்
வெட்சி வாசம் படர்த்தும் 
உன் மாளிகையில் 

யட்சனின் குளம் 
அரவானின் மனசு
கனாச் சடலங்கள் கரையெங்கும் 

கல் அகலிகை
சுமந்து வந்திருக்கிறாள் அண்டைச் சிறுமி
சிற்பம் செய்து தரச் சொல்லி

Thursday, December 30, 2010

உதிர பாகினி

காதுகளில் எலும்பு கூடாத


மழலை ஒன்றின் கபாலத்தை

அணிந்திருந்தாள்



அவள் பாதத்தில் நூற்றாண்டு காலம்

ஒரு கால் பாரம் தாங்கி கிடக்கிறேன்

கருணை கூர்ந்து என்னை தின்னக் கேட்டாள்



பெரு மகிழ்வுடன் ஏந்தினேன்

உப்பு தீர்ந்த இருதயம் முதலில் என்றேன்



நெஞ்சுக்கூடு விலக்கி விரல் செருகியவள்

அறைந்தாள் காணீர்



அவள் பெருந்தனத்தில் பெருகியது உதிரம்

பாதி கல்லான மரத்திலிருந்து மேலெழும் பறவைகள்

அவள் ரோமக் கால்கள்



காதலையுணர் உன் கர்ப்பப்பை

என் புறம் நாரி

சிற்றகல் சுடர்

உன்னொரு நாத்திக தீண்டலில் சுவர் மீதிருக்கும்


கண்ணாடிச் சில்லுகள் கடக்கும் பூனையாய்

அளந்து பதியும் பாதம்

ரோமக் காலிடையே மூச்சு



மூங்கிலின் குருத்துகள் பச்சையம் மாறுகையில்

பாய்மரத்தின் பாய்கள் பருவமெய்துகின்றன

தளும்பும் அலைகள் தெறிப்புகளால் உப்புறைய



மகரந்த முகத்துடன் திரியும் வண்ணத்துப் பூச்சி

பழிக்கிறது சிறகசையாமல் மிதக்கும் பறவையை