Friday, September 9, 2011

சல்லடைநிழல்

எவள் விட்டுச் சென்ற கொலுசின்
ஞாபகத்தில் நுரை கோர்த்திருக்கிறது
நாணல் நதிக்கரை

முகம் பொத்திய எந்த முந்தானையின்
வாசத்திற்கு தரை தடவிக் கொண்டிருக்கிறது
இக்கிளையின் சல்லடைநிழல்

எந்த உதட்டுக்கான முத்தத்தை
நீர்தளம் தொட்டு காற்றில் பறக்க
விடுகிறது இம்மீன்

யார் சாம்பலை கரைத்து விட்டு
எலும்பை நழுவ விட்ட இப்பாண்டத்தின் சில்லில்
வந்தமர்கிறது இந்த தட்டான்

Monday, August 29, 2011

மத்தகம்

மத்தகத்தின் மீது பட்டுத் தெறிக்கும்
மழைத்துளிக்கு பெயர் வெட்கம்

அதீத களிப்பில் ஒரு துளி விஷத்தால்
பரீட்சித்து பார்க்க குறுகுறுக்கிறது
மரணத்தை

வாலுயர்த்தி வானம் சுட்டி
கோளம் கொறித்து
உலகம் விழுங்க முயல்கிறது
அணில்

காகப் பொன் மினுங்க
கிடக்கும் வண்டல்
மீது அமர்கிறது தட்டான்
சிறகு தாழ்த்தி

தம் பருவத்தை
தானுணர்தல் ஆணுக்கு
வாய்ப்பதில்லை
ஒரு சிறுமியைப் போலே
அத்துணை நுட்பமாய்

(தான் பருவமெய்திய நாளை,நாழிகையை நினைவிறுத்தி மெதுவெப்பம் படரச் சொல்கிற மனைவி போல் சொல்லத் தெரியாத கணத்தின் சொல் வளர்த்த கிளை இக்கவிதை(?) )

Sunday, August 14, 2011

கிகலோவின் டைரிக் குறிப்புகள்

புனித நரகத்தை உழுத போது
கிடைத்த வெட்டு பட்ட நாணயம்
பூவிழுந்த உன் கருவிழி

*****************
நண்பனை புதைத்த நாளில்
அழிந்தது கரு வாசனை
நல்ல தவளையானேன்

**********************
சுண்டிய உதிரம்
நிரம்பியிருக்கும் ஆஷ்ட்ரேயில்
வெட்டிய நகம் போல்
உதிர்ந்து கிடக்கிறது
நாளை -மறு -நாள் இரவுக்கு
நிரல் செய்த வாடிக்கையாள
எண்ணெழுதிய காகிதம்
*********************
வீட்டுத் தேனீக்கள்
சேமித்துக் கொண்டே இருக்கின்றன
எச்சிலை விரும்பி உண்ணும்
உதடுகளுக்காக

*********************

Wednesday, July 13, 2011

உனக்கு எப்படி புரிய வைப்பது

நீ தட்டானாகி அமர்ந்து
சிறகு குவிக்கும் புல்
உன்னைப் புதைத்த கல்லறை

நீ புகட்டி வளர்த்த கனவுகள்
உனக்கெதிரான சாபங்களாய்
செல்பேசி எறிந்து 
பேட்டரிகளாய் கழன்று கொண்டிருக்கின்றன 

உனது புகைப்படத்தின் ஓரங்கள்
பழுப்பேறி விட்டன 
உனக்குத்தெரியுமா
நீ போற்றி மறைத்த நரை
தெள்ள வெளுத்த தருணக் காட்சியுடைய 
படம் அது 

உனக்கு எப்படி புரிய வைப்பது 
நீ இறந்து விட்டாய்

வாழ்வைப் பிணை வைத்த
ஒரு நம்பிக்கை பொய்க்கும் போது
இல்லாமலே மரிக்கும் கடவுளைப் போல 

போல போன்ற எல்லா போலகளும்
அழிந்து விடும்
விற்கப்பட்ட சிறுமியின்
பிறப்பைப் போல 

ஒரு ஆழ்ந்த காயத்தின் 
தையலாய் 
பிரிக்கப் பட்டு விட்டாய் 
நீ 

உனக்கு எப்படி புரிய வைப்பது 
அதன்பின் நானும் இரண்டு முறை 
இறந்து விட்டதை

( என்றும் )


அல்லது ..

இந்த கிரகம் இனி நமதல்லவென்பதை 

( என்றும் )

கழிவறைக் கூடையில் 
உன் அதீத அன்பு கருமையேறி 
வில்லைகளால் பின்னமுற்ற நாளில் 

( விரும்பியவாறு வாசித்து முடிக்கலாம் தலை கீழாய் எழுதப்பட்ட இந்தக் கவிதையை.. ) 

:)

Sunday, May 29, 2011

அதீத அன்பும் எச்ச பீடியும்

அலார வாழ்த்து,மகன் போன் நடிகை
எம்.எமெஸ்,அடுத்த நரகாசுர வேட்டையில்
 எஃப்.பி.ஐ... வாசகர்
கடிதத்திற்கு கஸ்டமர் லிஸ்ட்,சேகரோ,
ஆனந்தோ,முசல்மான் பேர் ஜாக்கிறதை,
லிஜெண்ட்,போலி,புரவலர் ,புலவர்,
பொறாமை-மைறாப்போ,
நீராடும் கடலுடுத்த டாஸ்மாக்கில்
மூன்றாம் பெக் நாத்திகன்,பான் கீ மூ,ஐ.நா ,
கொல்லணும்டா
அந்தத் .......

வக்கில்ல,ஐ பிஎல் முத்தம்,
வி ஆர் நோ மோர் கபிள்ஸ்,யாபா,பாபா,
6 ஆம் நம்பர்,டார்கெட் ரெவ்யூ,ப்ளடி ஃபக்கர்
லிப்ட்ல கை போட்றான்டி,பொன்னகரமென்று
கதைக்கிறீர்களே ஐயா,ஓஎமார் ப்ளாட்டு,பிகோ
2011,சாமுத்ரிகா ப்ரைடல் கலெக்‌ஷன்


தூய அன்பு ,அதீத அன்பு,பாலித்தீன் மழை,
எச்ச பீடி ,மாய்மாலம்,மஸாக்களி,
ரெண்டா போட்டுக்க இன்னிக்கு கட்சீ நாளு,
கடவுளிருக்கான் கொமாரு


Thursday, May 5, 2011

குவியம்

பேணிய மயிற்பீலியுதிர் இழையொண்ண 
நாணி கீறுஞ் செங்கண் கவிந்து அகல் கொள்
வானின் நிலவுண்ட துளி யொப்பி சீம்பால் அகம்
தூணின் சித்திரமேவு புகைத் துகில்

Thursday, April 28, 2011

ஊமை வெயில்


குற்றேவல் சேடியாய்
வந்து போனது மழை
மரத்தின் நிழல்வெளி செருப்பும்
நனையாமல்

ஊடல் மனைவியின்
கோணல்ப் பிறை முதுகை தீண்ட நீட்டி
திரும்பிய  விரல்களின்
தயக்கத்துடன்

மின் விசிறி நாவு மேவிய தூசாய்
விரிசிறகு மட்டும் நிறம் அடர்ந்த பறவைகள்

எடுத்து விட்ட விரலை  மீண்டும் வைத்துக்
கொள்ளும் தூக்கக் குழந்தையாய்
இரண்டு நாள் மட்டும் தள்ளிப் போன
சந்தோஷம்

படம் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்து கூரை ஓவியம்