Thursday, July 29, 2010

முத்த மீந்த மிடறுகள் -1

( I )

திசை பத்தும் மடங்கி நினதொரு சேலையின் முன்னிடை சொருகு மடிப்பாய் முடிந்துலவும் தருக்கு மிக உலவுகிறாய் அடை மிகுந்து கசியும் திரவமென பேருன்னதம் ஈந்து. பெயர் தொலைந்து பால் திரிந்து பெண்ணுமாகி நிதம் பெருகும் உதிரம் நிரம்பிய பையுடன் திரிகிறேன் நீ வீடேகுகையில் மையச் சாலையின் மது விடுதி முன் துவங்கி விட்ட உதிரத்திறப்பாய்.உறவுள  குழந்தையை ஆரத் தழுவி தூக்கக் கூசியக் கரம் மட்டும் வாய்க்கவில்லை எனக்கு, மஜ்ஜை வரை என் சுடு உதிரத்தின் உஷ்ணம் பரவ இறுக்கிக் கொள்ளும் வதையின் இறுமாப்பு... இணக்கம் யாசித்து யவ்வனம்  திமிரத் திமிர நிற்கிறது 
தீபகர்ப்பப் பொலிவுடன்

முட்டைகள் தீர்ந்த பருவத்தில் பெருந்தனத்தின் திசுக்கள் தாழ்ந்த கருவம் அழியும் தருணத்தில் என் வினையெச்சம் தீர்ந்து நீர்க்கும்,   தாபங்கள் தழுவலாய் தட்டையாகும். அவுரோகண இருதயத்தின் துடிப்பிசையில் ஆகாச ஓசோன் போலல்ல, கருந்துளைப் பரிதி போலுமன்று....  விசும்பைப் போல் விக்கல் மின்னலொடு நிலமேயுன் நீரோட்டம் புலம் கடந்து பூப்பெய்தியபடி இருக்கும் பிரியத்தின் புறத்தண்டு வளந்தபின்னும் நாணேற்றும்.

( II )

உன்னதா..!தாள இயலாததாய் இருக்கிறது நீ செய்யும் வன்முறை நீ செய்யும் கொடுவதையில் கசியும் உதிரம்.ஆட்டை அறுத்து தோல் உரித்து பாகம் பாகமாக வெட்டி விற்றுவிட்டு கடை மூடி திருஷ்டி கழிய வாசலில் சூடம் கொளுத்துகிறவனைபோல் புன்னகைத்து போகிறாய். உன்னை கொலை செய்யும் அளவுக்கு வெறுக்கிறேன் .வெறுப்பதைக் காட்டிலும் அதிகமாய் நேசித்தும் தொலைக்கிறேன் என்பதே என் பலகீனமும். 

வன்முறை யாசிக்கும் இந்த தீய வழக்கத்திலிருந்து விடுபட விரும்புவதே இல்லை.வலியின் வசீகரம் நிறைவு பெறுவது பிறகான முத்தத்தில் என்பதை அறிந்து வைத்திருக்கிறது உன் பற்களும் உதடுகளும். ரீசார்ஜ் அட்டைகளின் வெள்ளீ முலாமை சுரண்டுவதைப் போல் அத்தனை எளிதாய் இருக்கிறது உனக்கு என் தோல் உரிப்பது .ஒரு மலையுச்சியினின்று வீழ்பவனின் கதறலுடன் சொல்ல விரும்புவதெல்லாம் எப்பவும் போல் உன்னை நேசிக்கிறேன் நான் -ஐயும்  அதிகமாய்

                                                                                                                                     (தொடரலாமா)

11 comments:

ரோகிணிசிவா said...

வன்முறை யாசிக்கும் இந்த தீய வழக்கத்திலிருந்து விடுபட விரும்புவதே இல்லை.வலியின் வசீகரம் நிறைவு பெறுவது பிறகான முத்தத்தில் என்பதை அறிந்து வைத்திருக்கிறது உன் பற்களும் உதடுகளும்-அழகிய வரிகள் ,அழகான காதல்

நேசமித்ரன் said...

ரோகிணி சிவா

முதல் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Madumitha said...

காதலின் வலியை ரத்தமும்,கண்ணீருமாய்
சொல்கிற உங்களின் கவித பூசிய உரைநடைக்கு
ஒரு ச்ல்யூட்.

தொடரலாமே...

சி.பி.செந்தில்குமார் said...

மரபுக்கவிதை நடையில் உங்கள் உரை நடைக்கவிதை அருமை,தாராளமா தொடரலாம்

இராமசாமி கண்ணண் said...

காதலே ஒரு வலிதான் இல்லையா :(.. தொடருங்கள்...

ஆதவா said...

உயிர்த்துளி கசியக் கசிய ருசியெனப் பருகிவிட்டு, ப்ரக்ஞை அற்றது காமமென எண்திசைஉம் பேரரவம் தருகிறீர். எழுத்து பிறண்டு நாவினடி பொத்தியதில் உதிர்ந்து போயிற்று ஆஹாகாரம்.
வாழ்த்துகிறேன் உம்மை,
நெக்கிக் குழைந்த பழச்சேறு தாகத்தின் வலியடைத்த உம் எழுத்தை,
செங்கண் திறந்த பரிதியின் வண்ணம் பூசி உம்மால் சுரந்து பீற்றிய உம் காதலை,

நீர் நின்ற இடமே மன்னுதல் கவிஞர்க்கு மாண்பன்று. தொடர்க தோன்றியதை/

ஆதவா....

பா.ராஜாராம் said...

// தாள இயலாததாய் இருக்கிறது நீ செய்யும் வன்முறை நீ செய்யும் கொடுவதையில் கசியும் உதிரம்.ஆட்டை அறுத்து தோல் உரித்து பாகம் பாகமாக வெட்டி விற்றுவிட்டு கடை மூடி திருஷ்டி கழிய வாசலில் சூடம் கொளுத்துகிறவனைபோல் புன்னகைத்து போகிறாய்//

கொல்றீயேடா ராஸ்கல்!

(பயமில்லால் இந்த வீட்டில் புழங்க முடியுது நேசா) :-))

தொடரவும்...

ஹேமா said...

அன்பின் பலஹீனமும் செப்பிடு வித்தைதான் நேசா....இழுத்தலும் விடுதலுமாய் !
தொடருங்கள்.

thenammailakshmanan said...

உன்னை கொலை செய்யும் அளவுக்கு வெறுக்கிறேன் .வெறுப்பதைக் காட்டிலும் அதிகமாய் நேசித்தும் தொலைக்கிறேன் என்பதே என் பலகீனமும். //

இதுதான் எல்லாமும். என்ன சொல்ல..அருமை நேசன்..

Geetha said...

இரண்டாம் பத்தியில் வியந்து நிற்கிறேன்.... அசாத்திய உவமானம் !

இன்னமும் மனதில் அப்படியே நிறைந்து நிற்கும் "ஆஷ்ட்ரேயில் உதிர்ந்திருக்கும் விரல்கள் "
போன்ற ஒன்றை எதிர்பார்த்து கொண்டேயிருக்கிறேன்.....

விந்தைமனிதன் said...

படிக்கும்போது ஒரு கேவலுடன் கூடிய ஏக்கம் ததும்புகின்றது... இப்படி காதலிக்கப் படுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...

Post a Comment