Thursday, August 5, 2010

முத்த மீந்த மிடறுகள் -2 (பிச்சி)

                    சகல பிச்சித்தனமும் உள்ள யட்சிகளின் நேசம் கோடை காலத்து நீரோடையென கால் தழுவி தொடரச் செய்கிறது.இருப்பின் வேர்களை உருவிக் கொண்டு கிளைகளைப் பூக்கச் செய்யும் பறவைகளின் நகங்களில் மீதமிருக்கிறது உச்சி ஆகாசத்திலும் மரத்தின் தசை ..

மெல்லிய விரி கோணப் புன்னகையில் புலன்களில் பெய்விக்கும் ஆலங்கட்டி மழையில் காமம் தன் பற்களை உதிர்க்கிறது. இழை இழையாய் நெய்து முடித்து விடுகிறார்கள் வாசனைகளால் ஆன கூட்டை நீருள் நெளிந்து கொண்டிருக்கிறது  முள் நுனியில் மரணம் காத்திருப்பில் இறுகிய மௌனத்தின் வயிறு கிழித்து எடுக்க வேண்டியிருக்கிறது சொற்களை மட்டும்

எனக்கான நோவாக் கப்பல் ஓர் உலகு செய்யும் ஜீவன்களுடன் வரும் ஆகாய வழி கொண்டிருக்கிறது ஒருபாடு பூத்த- சிலுவைகள் முளைத்த மயானத்தை ஒரு திரிசங்கு சொர்க்கத்தை ,பாலைவனத்து ஜின்களின் மலை உச்சியை குழந்தைக்கு ஊட்டுகையில் நமக்கு எடுத்து ஊட்டும் குழந்தையின் உலகம் அழகாகிறது கைகழுவ நீரெடுக்கப் போயிருக்கும் அம்மா வருவதற்குள் நாயின் கழுத்தைக் கட்டி எச்சில் வாயுடன் முத்தம் இடுகையில்

பட்டுப் பூச்சியை துரத்திப் பிடிக்கும் அதே மனசுதான் அழுகிறது அதன் சிறகு பிய்ந்ததற்கும்
குழந்தைகளால்தான் கடவுளாகவும் முடிகிறது ஒரு சிற்பியின் கூடாரத்தைப் போல
ஒரு மனம் பிறழ்ந்தவன் ஆடை அணிவதை போல கால்கள் பிணைக்கப் பெற்ற ஒரு கழுதையின் வாலில் கட்டப்பட்ட பட்டாசு சரத்தின் அதிர்வைப் போல இறைந்து கிடக்கிறது யாவும்

மானின் கொம்புகளைப் போல் பாதைகள் பிரிந்த உறவின் துவக்கம் உன் மார்புகளை வலிந்து கடந்து கண்களில் இருந்து துவங்கியது என்பதை வெட்கமற்று ஒப்புக் கொள்ளும் பாசாங்கு தீர்ந்த பருவத்தை அடைந்திருக்கிறேன்.  முது வேனில் குளத்தின் நீர்வற்றிய குளத்தின் பாசி கருத்த பாறைகளில் அமர வருவதில்லை எந்தப் பறவையும் .

உவந்து துயர் கொண்ட நேசத்தின் கரங்களில் இருந்து வடிந்த உதிரத்தின் பிசு பிசுப்பில் புசித்த கனிகளின் சாரமும் விரவிக் காய்ந்து விட்டது. புலர்தலின் ஈரம் படிந்த அடர் வனத்தின் முதல் சலனங்கள் திசைதப்பிய பறவைக்கு ஆறுதலாய் இருக்கிறது .குப்பைகளின் பாலித்தீன் சரசரப்பு நிரந்தரமாய் வாய்த்திருக்கிறது சொற்களுக்கும் கவிதைகளுக்கும் .பலூன்காரன் செய்யும் குழந்தைகளுக்கான சீழ்க்கை சமிக்ஞைகளில் கவனம் திரும்பி முகம் மலரும் சிறுமியாய் நீரமிழ்கிறது வாதையின் சாம்பல்

9 comments:

Unknown said...

வேறொரு தளத்திற்கு இட்டுசெல்கிறது... வார்த்தை சுழிப்பில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்..

vasu balaji said...

அலை அலையாய் அதிர்வுகள். அனுபவிக்க வேண்டியவை. செப்பிடும் வித்தை!

ஹேமா said...

பொறாமை கூடிக்கிட்டே போகுது நேசன்.எனக்குக் கண் தெரியாம போச்சு போல.நடுவில கவிதை எழுத்து தெரில.

anbarasan said...

CLICK THE LINK AND READ


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

.............

sakthi said...

ஹேமா said...


பொறாமை கூடிக்கிட்டே போகுது நேசன்.எனக்குக் கண் தெரியாம போச்சு போல.நடுவில கவிதை எழுத்து தெரில.

ஹ ஹ ஹ ஹ

sakthi said...

அண்ணா ரொம்ப நேரமா கீபோர்ட்ல கை இருக்குது என்ன டைப் அடிப்பது என யோசித்துக்கொண்டே!!!!

Geetha said...

//இருப்பின் வேர்களை உருவிக் கொண்டு
கிளைகளைப் பூக்கச் செய்யும் பறவைகளின் நகங்களில் மீதமிருக்கிறது உச்சி
ஆகாசத்திலும் மரத்தின் தசை //

மிக அழகு.

//பலூன்காரன் செய்யும் குழந்தைகளுக்கான சீழ்க்கை சமிக்ஞைகளில் கவனம் திரும்பி முகம் மலரும் சிறுமியாய் நீரமிழ்கிறது வாதையின் சாம்பல் //

உணரச் செய்யும் வரிகள்.

சின்னப்பயல் said...

இப்படியும் எழுத இயலுமா..?

ஆதவா said...

ம்ம்...... நன்று!!

புனைவு அகநிலையிலிருந்து வாசிக்கும்பொழுது எழும் கோணங்களை வெட்டி வாசிப்பு மனதினுள் நிறைத்துக் கொள்கிறேன். சுவையறிய சயனைடுக்கு ஒப்பானதிது!
காடு அடர்த்தியாக இருக்கிறது.
சுள்ளிகள் பாதங்களைக் குத்தவில்லை!
இது சுவற்களுக்கு அடங்கிவிட்டதா? அல்லது திறந்தவெளியாக இருக்கிறதா?

நீளுமென
ஆதவா/

Post a Comment