முதல் சொட்டுக்கு
கண் திறவா குன்றிலிருந்து
இறங்குகிறது மேய்ச்சல் முடிந்த
பிட்டி பச்சையத்துடன்
வெள்ளாட்டுக் கிடை
சுவாசிக்கிறாள்
தாவணி நிலவுலாவு
நீர்மலி மேனியாய் அசைய
அடைகாக்கும் சர்ப்பம்
அரவம் கேட்டு விரித்த படம்
குவிகிறது ஐயம் தீர்ந்து
தளும்பி தளும்பி ஏறி விடுகிறது
படிக்கட்டில் மாரிக்கால குளம்
ஆரஞ்சு நிற சிலேட்டின் கடிப்பட்ட
பற்தடம்
புரள்கையில் விலகுகிறது
கொலுசு
வாழைப்பூவுக்குள்
ஒளித்திருக்கும் விரல்களை
திறக்கத் முடிகிற அணிலை
காணக் கூடுவதில்லை இப்போதெல்லாம்
காதுக் கம்மலுக்கு
தெரிந்திருக்கிறது குளியல் சோப்பை
நகக்கண்ணில் வைத்துக் கொள்ள
எவ்வளவு முயன்றாலும்
முடிவதில்லை உதடுகளுக்கு