Thursday, December 30, 2010

உதிர பாகினி

காதுகளில் எலும்பு கூடாத


மழலை ஒன்றின் கபாலத்தை

அணிந்திருந்தாள்



அவள் பாதத்தில் நூற்றாண்டு காலம்

ஒரு கால் பாரம் தாங்கி கிடக்கிறேன்

கருணை கூர்ந்து என்னை தின்னக் கேட்டாள்



பெரு மகிழ்வுடன் ஏந்தினேன்

உப்பு தீர்ந்த இருதயம் முதலில் என்றேன்



நெஞ்சுக்கூடு விலக்கி விரல் செருகியவள்

அறைந்தாள் காணீர்



அவள் பெருந்தனத்தில் பெருகியது உதிரம்

பாதி கல்லான மரத்திலிருந்து மேலெழும் பறவைகள்

அவள் ரோமக் கால்கள்



காதலையுணர் உன் கர்ப்பப்பை

என் புறம் நாரி

சிற்றகல் சுடர்

உன்னொரு நாத்திக தீண்டலில் சுவர் மீதிருக்கும்


கண்ணாடிச் சில்லுகள் கடக்கும் பூனையாய்

அளந்து பதியும் பாதம்

ரோமக் காலிடையே மூச்சு



மூங்கிலின் குருத்துகள் பச்சையம் மாறுகையில்

பாய்மரத்தின் பாய்கள் பருவமெய்துகின்றன

தளும்பும் அலைகள் தெறிப்புகளால் உப்புறைய



மகரந்த முகத்துடன் திரியும் வண்ணத்துப் பூச்சி

பழிக்கிறது சிறகசையாமல் மிதக்கும் பறவையை

காற்றும் சப்தமும்

வேர்கள் நீருறுஞ்சும்


மௌனக் கிசுகிசுப்பை

மழையருந்திப் பறவைகள்

சப்தம் பெயர்த்து இலக்கணம்

இயம்பின



மரங்கொத்திப் பறவைகள்

விரும்பித் துயிலும் மரம்

மீன் கொத்திகளின் கனவிலிருந்தது

ஏந்திய கரங்களுடன்



மாங்குரோவ் காடுகள்

பறவைகள் கண்டம் கடக்க

விண்ணெழும்பியதும்

அலை சப்தம் சுருதிப் பிசகாமல்

ஒரு நரைத்த இலை உதிர்ந்து மிதக்கிறது



பறவைகளுக்கு மரமும்

மரங்களுக்குப் பறவையும்

காற்றும் சப்தமும்

Monday, October 11, 2010

கூகுளில் தொலைந்தவள்

தலைப்பிரட்டைகள் தம்மை மீன்களல்ல 
என்று நம்பத்துவங்க.. 
வேண்டி இருக்கிறது ஒரு பருவத்தின் 
முந்தி விந்து விடும் ஆகாசம் 

மைக்ரேன் தலையர்களின் தியானம் 
மரப்பட்டைகளின் கீழ் வாழும் புழு நெளிவு 

பாலித்தீன் பைகளுக்குள் அடரத்துவங்கிய 
வேர்கள், கால் நுகர்ந்து பின்தொடரும் நாய்குட்டிகள் 
மீட்பனோ எண்ணழிந்த ரிமொட்டின் பொத்தானாய் 

சேவற் கொண்டைப் பூக்கள் காத்திருக்கின்றன 
அடுத்த மரணத்திற்கு காத்திருக்கும் வெட்டியானின் 
சாராய புட்டியென., 

தன்னை வதைத்துக் கொள்ளும் மனப் பிறழ்வுற்ற 
பெண்ணின் பேரோலம் உலுக்கி விழிப்பைத் திணிக்கிறது 
விரல் சுவைத்து உறங்கும் மகவில் 

சில தகனங்களுக்கு தேர் வருவதில்லை 
உன் ஆன்மா அமர நாளிலேனும் அமைதியுறட்டும்

Saturday, October 9, 2010

வெளியேற்றம்

ஒரு கருக்கலைந்த கவிதை 
பாதரசம் கூடுவதைப் போல் உயிர்த்தெழலாம் 
கொலைக்குத் தகுதியான நட்பின் துரோகத்தை மன்னிக்கலாம் 
உறங்கும் குழந்தையின் 
தொட்டில் கடந்து நீண்டிருக்கும் கால்கள் வழி பால்வீதி கடக்கலாம் 
கலவியில் தோற்றுக் கிடக்கும் கணவனின் 
நெற்றிதடவி குழல் கோதலாம் 
ஒரு துறவியின் காத்திருந்த மரணத்தைக் கொண்டாடலாம் 
பிசாசின் காமத்துடன் கடவுளுக்குப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் 

நுழையும் போது

மழை

காளான் குடைக்குள் ஒடுங்கிக் கொள்ள முடிகிறது 
இரவு நேர வெளிச்ச ஜன்னல்களுடன் மரவட்டை ரயில் 

முன்னறிவிக்க ஆகாசம் பார்த்துக் குலைத்த நாய் 
மயில் .. கடைசியாய் தென்காசிப் பக்கம் பார்த்தது 

கடலை சல்லித்துக் கொண்டிருக்கிறாள் 
ஆயிரம் கண்ணுடைய தேவதை 

தகப்பனுடன் நனைந்து கொண்டிருக்கிறாள் 
அருவியின் கூச்சலுடன் மொட்டை மாடியில் அதே சாதி 
தேவதா 

மடி மட்டும் நனையாமல் இருக்கிறது சுவரொடுங்கி 
சுருங்கிய இமையசைக்கும் நகரத்து பசுக்கள் 

கழுவ கழுவ திரவப்பொட்டுகள் கார் கண்ணாடியிலும் 
இன்னுமொரு தலையணை காலியாகவே மாதம் பல கிடக்கும் 
படுக்கையிலும்

Tuesday, October 5, 2010

குழியேகும் எறும்புகள்

தகனச் சாமத்தில் அழுகை தீர்ந்து


உறங்கும் மகளை எழுப்புகிற நாயின் ஊளை

படர்த்தும் நடுக்கத்திற்கு

எரியும் ஒற்றை விளக்கு அணையாமல்

திரவமூற்றும் கரம்

வேண்டியிருக்கிறது ஒரு மெல்லிய

அணைப்பிற்காக



தீராச் சமர்களின் விரை தீர்ந்த ஆயுதங்கள்

தலைதிருப்பப்படும் மௌனம்

மகுடிகளைப் போல் இயக்குகிறது

பிடாரனனின் காலடி அதிர்வுடன்



கசாப்பின் மரமேடை கழுவப் பெறுகிறது

துணுக்குகள் மீதமிருக்கின்றன குழிகளில்

முள்மரங்களில் ஏறும் சாரை வளைவுகளுடன் இல்லை

குழியேகும் எறும்புகள்



பிண்டத்துண்டங்களுடன் வெளியேறும்

உதிரத்தின் கவிச்சை தாள

இயலாததாய் இருக்கிறது

சுகித்த பாகங்களை அறுத்தெறியும்

கசப்புடன்

Monday, September 27, 2010

எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல்

விருந்தினள் உடுப்பிலிருந்து


உதிர்ந்து விட்டிருக்கும் பொத்தான்

எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல்



தற்கொலைக்குத் திட்டமிடுவதைப் போல்

படுக்கை விரிப்புகளை நீவிக் கொண்டிருக்கும்

கரத்தின் நடுக்கம்

சிறகசைக்காமல் நடந்து பழகாத பறவையின்

கால்கள்



செத்த முத்தத்தின் கவிச்சிக்கு விரையும்

நாய்கள் தம் நகங்களில்

உதடுகளுக்குரிய பற்களைக் கொண்டிருக்கின்றன



மீண்டும் பொருத்த முடியாத கரத்தினைப்

போன்றதல்ல

எடுத்த இடத்தில் வைக்க முடியாத சொல்

Thursday, September 23, 2010

பிறிதொரு பறவையின் இரை

சுவாசங்களால் உஷ்ணப்படாத அறைகள் தம் வடிவை இழக்கத்துவங்குகின்றன சிலந்திகளால்




இருப்பின் அதியுன்னதத்தை விட

கனவின் மீதான் குறி சொல்லுதல் உறையுடன் துய்த்தல்



பட்டுச்சீலை பிசிறுகளில்

நினைவுக்கு வந்து தொலைக்கிறது

சதா பட்டுக் கொண்டே இருந்த உடல் மற்றும் உடல்



நிராகரிக்கபட்ட சொற்கள் அடைமுடிந்த ஓடுகளாய்

கொத்தித் திறக்கப் பெறுகின்றன பிறிதொரு பறவைக்கு இரையாக



ஒற்றை மார்புடன் சீலை கட்டப் பழகுவதாய்

சிரிப்பால் நிரப்பிக் கொண்டிருக்கிறது நிறையாத பிறை

Wednesday, September 15, 2010

நிழல்

தீராத அன்பை எழுதித் தீர்த்து
விட ஆகாசம் அளந்து உதிர்ந்த சிறகு
சிறந்த தேர்வுதான்
கூழாங்கல் மீது நகரும் சிறகின் நீர்நிழல்

Friday, August 13, 2010

எறும்பேறாத உப்பு ஜாடிகள்

விளையாடத் கேட்கும் மடிகள்


உப்புமூட்டை தொங்கத் தோன்றும் தோள்கள் ....

ஸ்பரிசமற்று முதிர்வதை தீர்க்க வருகிறார்கள்

தங்கைக் குழந்தைகளோ, பேருந்தில்

உறங்கி சாயும் பெயர் அறியாப் பெண்ணோ....



தாமதமான ஈர நாட்களில்

நுரைப்பஞ்சு பெற்றுத் திரும்புகையில்

மருந்தகத்து பெண் சிரித்து வைக்காதிருக்க

பிரார்த்தித்து தொலைக்கிறது மனசு



அம்மா மாத்திரைகளை தவிர்க்காதே

பிதாவே பின்னிரவில் விசும்பாதிரும்



யார் இடம் மாற்றி வைப்பது

எறும்பேறாத உப்பு ஜாடிகளை

வெயில் குருவிகள்

நீரில் வலை விழுவதைப் போல

 புல்வெளியில் அமர்கின்றன குருவிகள்


சலனங்கள் சப்தங்களால் அறியப்பெறும்

புல்லின் அடியீரத்தில் கிட்டுகின்றன

இரைப் பூச்சிகள்

நகர்ந்தபடி இருக்கிறது வெயிலும்

 நீரில் வலையும்

திரும்பும் நேரம் வந்துவிட்டது

வலைகள் படகிற்கும்

குருவிகள் யாருமற்ற வீட்டின் கூட்டுக்கும்

Thursday, August 5, 2010

முத்த மீந்த மிடறுகள் -2 (பிச்சி)

                    சகல பிச்சித்தனமும் உள்ள யட்சிகளின் நேசம் கோடை காலத்து நீரோடையென கால் தழுவி தொடரச் செய்கிறது.இருப்பின் வேர்களை உருவிக் கொண்டு கிளைகளைப் பூக்கச் செய்யும் பறவைகளின் நகங்களில் மீதமிருக்கிறது உச்சி ஆகாசத்திலும் மரத்தின் தசை ..

மெல்லிய விரி கோணப் புன்னகையில் புலன்களில் பெய்விக்கும் ஆலங்கட்டி மழையில் காமம் தன் பற்களை உதிர்க்கிறது. இழை இழையாய் நெய்து முடித்து விடுகிறார்கள் வாசனைகளால் ஆன கூட்டை நீருள் நெளிந்து கொண்டிருக்கிறது  முள் நுனியில் மரணம் காத்திருப்பில் இறுகிய மௌனத்தின் வயிறு கிழித்து எடுக்க வேண்டியிருக்கிறது சொற்களை மட்டும்

எனக்கான நோவாக் கப்பல் ஓர் உலகு செய்யும் ஜீவன்களுடன் வரும் ஆகாய வழி கொண்டிருக்கிறது ஒருபாடு பூத்த- சிலுவைகள் முளைத்த மயானத்தை ஒரு திரிசங்கு சொர்க்கத்தை ,பாலைவனத்து ஜின்களின் மலை உச்சியை குழந்தைக்கு ஊட்டுகையில் நமக்கு எடுத்து ஊட்டும் குழந்தையின் உலகம் அழகாகிறது கைகழுவ நீரெடுக்கப் போயிருக்கும் அம்மா வருவதற்குள் நாயின் கழுத்தைக் கட்டி எச்சில் வாயுடன் முத்தம் இடுகையில்

பட்டுப் பூச்சியை துரத்திப் பிடிக்கும் அதே மனசுதான் அழுகிறது அதன் சிறகு பிய்ந்ததற்கும்
குழந்தைகளால்தான் கடவுளாகவும் முடிகிறது ஒரு சிற்பியின் கூடாரத்தைப் போல
ஒரு மனம் பிறழ்ந்தவன் ஆடை அணிவதை போல கால்கள் பிணைக்கப் பெற்ற ஒரு கழுதையின் வாலில் கட்டப்பட்ட பட்டாசு சரத்தின் அதிர்வைப் போல இறைந்து கிடக்கிறது யாவும்

மானின் கொம்புகளைப் போல் பாதைகள் பிரிந்த உறவின் துவக்கம் உன் மார்புகளை வலிந்து கடந்து கண்களில் இருந்து துவங்கியது என்பதை வெட்கமற்று ஒப்புக் கொள்ளும் பாசாங்கு தீர்ந்த பருவத்தை அடைந்திருக்கிறேன்.  முது வேனில் குளத்தின் நீர்வற்றிய குளத்தின் பாசி கருத்த பாறைகளில் அமர வருவதில்லை எந்தப் பறவையும் .

உவந்து துயர் கொண்ட நேசத்தின் கரங்களில் இருந்து வடிந்த உதிரத்தின் பிசு பிசுப்பில் புசித்த கனிகளின் சாரமும் விரவிக் காய்ந்து விட்டது. புலர்தலின் ஈரம் படிந்த அடர் வனத்தின் முதல் சலனங்கள் திசைதப்பிய பறவைக்கு ஆறுதலாய் இருக்கிறது .குப்பைகளின் பாலித்தீன் சரசரப்பு நிரந்தரமாய் வாய்த்திருக்கிறது சொற்களுக்கும் கவிதைகளுக்கும் .பலூன்காரன் செய்யும் குழந்தைகளுக்கான சீழ்க்கை சமிக்ஞைகளில் கவனம் திரும்பி முகம் மலரும் சிறுமியாய் நீரமிழ்கிறது வாதையின் சாம்பல்

Thursday, July 29, 2010

முத்த மீந்த மிடறுகள் -1

( I )

திசை பத்தும் மடங்கி நினதொரு சேலையின் முன்னிடை சொருகு மடிப்பாய் முடிந்துலவும் தருக்கு மிக உலவுகிறாய் அடை மிகுந்து கசியும் திரவமென பேருன்னதம் ஈந்து. பெயர் தொலைந்து பால் திரிந்து பெண்ணுமாகி நிதம் பெருகும் உதிரம் நிரம்பிய பையுடன் திரிகிறேன் நீ வீடேகுகையில் மையச் சாலையின் மது விடுதி முன் துவங்கி விட்ட உதிரத்திறப்பாய்.உறவுள  குழந்தையை ஆரத் தழுவி தூக்கக் கூசியக் கரம் மட்டும் வாய்க்கவில்லை எனக்கு, மஜ்ஜை வரை என் சுடு உதிரத்தின் உஷ்ணம் பரவ இறுக்கிக் கொள்ளும் வதையின் இறுமாப்பு... இணக்கம் யாசித்து யவ்வனம்  திமிரத் திமிர நிற்கிறது 
தீபகர்ப்பப் பொலிவுடன்

முட்டைகள் தீர்ந்த பருவத்தில் பெருந்தனத்தின் திசுக்கள் தாழ்ந்த கருவம் அழியும் தருணத்தில் என் வினையெச்சம் தீர்ந்து நீர்க்கும்,   தாபங்கள் தழுவலாய் தட்டையாகும். அவுரோகண இருதயத்தின் துடிப்பிசையில் ஆகாச ஓசோன் போலல்ல, கருந்துளைப் பரிதி போலுமன்று....  விசும்பைப் போல் விக்கல் மின்னலொடு நிலமேயுன் நீரோட்டம் புலம் கடந்து பூப்பெய்தியபடி இருக்கும் பிரியத்தின் புறத்தண்டு வளந்தபின்னும் நாணேற்றும்.

( II )

உன்னதா..!தாள இயலாததாய் இருக்கிறது நீ செய்யும் வன்முறை நீ செய்யும் கொடுவதையில் கசியும் உதிரம்.ஆட்டை அறுத்து தோல் உரித்து பாகம் பாகமாக வெட்டி விற்றுவிட்டு கடை மூடி திருஷ்டி கழிய வாசலில் சூடம் கொளுத்துகிறவனைபோல் புன்னகைத்து போகிறாய். உன்னை கொலை செய்யும் அளவுக்கு வெறுக்கிறேன் .வெறுப்பதைக் காட்டிலும் அதிகமாய் நேசித்தும் தொலைக்கிறேன் என்பதே என் பலகீனமும். 

வன்முறை யாசிக்கும் இந்த தீய வழக்கத்திலிருந்து விடுபட விரும்புவதே இல்லை.வலியின் வசீகரம் நிறைவு பெறுவது பிறகான முத்தத்தில் என்பதை அறிந்து வைத்திருக்கிறது உன் பற்களும் உதடுகளும். ரீசார்ஜ் அட்டைகளின் வெள்ளீ முலாமை சுரண்டுவதைப் போல் அத்தனை எளிதாய் இருக்கிறது உனக்கு என் தோல் உரிப்பது .ஒரு மலையுச்சியினின்று வீழ்பவனின் கதறலுடன் சொல்ல விரும்புவதெல்லாம் எப்பவும் போல் உன்னை நேசிக்கிறேன் நான் -ஐயும்  அதிகமாய்

                                                                                                                                     (தொடரலாமா)

மீள் வருகை

ஒரு பெருந்துயரை 
பிளிறும் குரலில் மரண வீடு
தோறும் அழும் ஒப்பாரிப் பெண்
விசும்ப மட்டுமே முடிகிற வீடாய்
இருக்கிறது நீயற்ற உன் அண்மை

உனதின்மைகளில் உறங்கிப்
பழகிய பூனை உன் மீள்வருகை கலவிகளில்
கதவு பிறாண்டியபடி இருக்கிறது
எவ்வளவு துரத்தினாலும் நாவறண்ட
குழந்தையின் அழுகைக்குரலுடன்  

உள்ளழைத்துக் கொண்ட பவள மல்லி மரத்தில்
இரவுகளில் பூவுதிர்த்தபடி கிடந்த கற்பும்
வெப்புத் தாளாமல் குழி பறித்துறங்கும் நாய்க்கு
கொடுத்திருக்கும் குளிரும்
கம்பளிப் பூச்சிகள் அப்பிய முருங்கையாய்
தின்னக் கொடுத்தபடி

கர்த்தனே உயிர்தெழுப்புதலற்ற
சிலுவையில் அறைந்து போ

Sunday, July 25, 2010

செப்பு மொழி

புத்தனைக் கொன்ற குருதியில்
பூப்பெய்திய காதலை

ஒரு தகன நெருப்பில்
தழைக்கத் துவங்கும் ஞானத்தை

மகரந்தம் ஒட்டிய வண்ணத்துப் பூச்சியின்
உணரிகளின் அசைவை
எழுதிப் பார்த்த கவிதைகளை

தனிமையின் இன்மையை
பேசித் தீர்க்கும்
பின்னிரவுக் குயிலின் பாடலை

எலும்புகளில் தீ சுரக்க வைக்கும்
தருணத்தை பரிசளிக்கும் தப்பிதங்களை

நட்பின் துரோகத்தை
பிரியங்களின் வன்முறையினை
உலர்ந்த நதியின் படுகைகளில் ஆழ்
துளையிட்டு நீருறிஞ்சும் பாவனையில்
பொருள் வயிற் பட்ட வாழ்வின் கோரங்களை

ரேகைகளை எழுதும் கருவறை மோனத்தில்
கல்லெறிந்த புத்தகங்களை

வாதையை வலிந்து துய்க்கும் மின்மயான மனசை
 மிருக வாசனை மாறாத புணர்வின் கீறல்களை

கொப்பளிக்கும் உலோகக்குழம்பாய்
கண்மாறும் வதை தெறிக்கும் நிமிடங்களை

வசீகர பொய்களை
மரிக்கும் ஆணின் உடல் கசிய விடும்
கடைசித்துளி விந்தை
வாடகைக் கருவறைகளை

திரிந்த காமத்தை
தீராத அன்பை

செப்பிடு வித்தை