Tuesday, January 17, 2012

மண் பிறைக் குருவிகள்

மூடப்பட்ட கிணற்றுச் சுவர்களில்
அலையும் ஒளியென
ஒரு முத்தம் 

மண் பிறைக் குருவிகள் 
இரைக்கு வருவதும் போவதுமாய்

ஆறு வறண்ட ஊரில் 
ஜோடி மாலைகள் மூடி திறந்து 
வீழ்கின்றன

எழுப்பப் பெற்ற வௌவால்
Z   போல பறக்கிறது

Wednesday, November 30, 2011

நப்பின்னைக்கு ...




ஈன்ற பொழுதின் உதிரங்கழுவாத அந்தி
முதல் சொட்டுக்கு 
கண் திறவா குன்றிலிருந்து 
இறங்குகிறது மேய்ச்சல் முடிந்த 
பிட்டி பச்சையத்துடன் 
வெள்ளாட்டுக் கிடை 
சுவாசிக்கிறாள் 
தாவணி நிலவுலாவு 
நீர்மலி மேனியாய் அசைய 

அடைகாக்கும் சர்ப்பம்
அரவம் கேட்டு விரித்த படம் 
குவிகிறது ஐயம் தீர்ந்து 
தளும்பி தளும்பி ஏறி விடுகிறது 
படிக்கட்டில் மாரிக்கால குளம் 

ஆரஞ்சு நிற சிலேட்டின் கடிப்பட்ட 
பற்தடம்
புரள்கையில் விலகுகிறது 
கொலுசு 

வாழைப்பூவுக்குள் 
ஒளித்திருக்கும் விரல்களை 
திறக்கத் முடிகிற அணிலை 
காணக் கூடுவதில்லை இப்போதெல்லாம்
காதுக் கம்மலுக்கு 
தெரிந்திருக்கிறது குளியல் சோப்பை 
நகக்கண்ணில் வைத்துக் கொள்ள 
எவ்வளவு முயன்றாலும் 
முடிவதில்லை உதடுகளுக்கு



Sunday, November 13, 2011

அது ....!

கொஞ்சம் தவிட்டு வாசம் 
மீதமுள்ள
பதனிடப் பட்ட தோலுறையில் 
இருந்து உருவுகிறீர்கள் 
கழுவப் பெற்ற குழந்தையின் 
ஈரக் குழல் போல் மின்னுகிறது 
அது...

குற்றங்களை பட்டியலிடுகிறீர்கள் 
மேதமை மிளிரும் 
உங்கள் மொழியில் ,இடையிடையே 
மீசையை நீவிய படி .. 
முன்னால் இருக்கும் மர மேசையில் 
அனிச்சையாய் ஏதோ ஒரு பெயரின் 
தலைப் பெழுத்தை கீறுகிறது 
கூர் நுனி 

மறுதலிப்பதற்கான
ஷரத்துகளின் உட்பிரிவுகள் 
முதற்கொண்டு மனனம் 
செய்த குரலில் ஒப்பிக்க முடிகிறது 
உங்களுக்கு 

தன் பிழையால்
மரித்தவள் கணவனுக்கு 
துளி நடுக்கமும் இல்லாமல் 
ஒரு தேர்ந்த மருத்துவன் 
பதிலுறுக்கும் சாயலில் 

உங்கள் வாக்கியங்களுக்கான
முற்றுப் புள்ளிகளை 
மேசையில் வைத்தபடி தொடர்கிறது 
கம்பளிக்கு வளர்ந்த ஆட்டின் மீது 
நகரும் எந்திரமாய் உரையாடல் 

விசாரணை முடிந்ததென்றும் 
என் பெயர் மரித்தவர் பட்டியலில் 
இணைக்கப் பெற்று விட்டதாகவும் 
எனக்கான உங்களின் நியாயச்சலுகைகள் 
தீர்ந்ததென்றும் அறிவிக்கிறீர்கள் 

உங்கள் உதவியாளரிடம் 
பிரேதப் பரிசோதனை முடிந்து 
ஒப்படைக்கும் உடலைப் போல் 
தீர்ப்பெழுதி கையெழுத்திட்ட கோப்பினை
கையளிக்கிறீர்கள் ,
மீண்டும் உறைக்குத் திரும்புகிறது 
நூற்றாண்டுகளுக்கு முன் உதிரம் 
கண்ட அது 


அறுந்து போயிருந்த மின்சாரம் 
மீண்டும் வருகிறது 
அணைக்க மறந்த விசிறியால் 
அறை மூலை ஒட்டடை அசைகிறது 
அறிதுயிலில் இருக்கிறது 
சிலந்தி அசைவேதுமற்று

Wednesday, November 9, 2011

எழுதுதல் என்பது ...


நதிக்கரையில் அமர்ந்துகொண்டு
உயிர் தவளைகளை நிறுப்பவன்

பிளந்து தைத்து மம்மிகள் போல்
சுற்றித் தரும் உடலின் கை மடிப்பில்
நேர்த்தி ஓர்பவன்

மைக்ரோ டிப் வந்த பிறகும்
இன்னும் ஷார்ப்னரில் திருகிய
புதுப் பென்சிலின் முதல் சீவல்
மரச் சுருளை பத்திரப் படுத்துகின்றன
குழந்தைகள்

எப்போதேனும் ஊர்வரும் விடுமுறையில்
இப்பவும் குடுகுடுப்பைக்காரரிடம்
கால் மணி நேரம் பேச இருக்கிறது
முன்னாள் காதலிக்கு

கழிவுகளை கட்டிக் கொடுத்தபிறகு
இப்பவும் மறக்காமல் சூடம் கொளுத்துகிறார்
கறிக்கடை சென்றாயப் பிரபு

பாட்டன் மரணத்தை மனைவியிடம்
 மறைத்து இன்னமும் ட்ரான்ஸ்பரில் ’ஹோம்’க்கு
பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான் யாரோ
ஒரு பேரன்

கடைசி கண்ணிப்பூவை
ஒரு தூண் சிற்பத்திற்கு சூட்டி
கண்படாத தனித்த கணத்தில்
முத்தமிட்டு விரைபவள்

இன்னமும் கவிதைகள் எழுதுகிறவனையும்
வாசிக்கும் உங்களையும் போல

Tuesday, November 1, 2011

ஞாபகம் என்பது நத்தையின் ஓடு

தனதன்பை பகடி செய்தவர்களிடம் 
தரவும் புத்தனிடம் 
ஒரு புன்னகையே இருந்தது. - Siddharth Venkatesan 


ஞாபகம் என்பது நத்தையின் ஓடு 
துகிலுரித்து கொண்டிருக்கும் 
சர்ப்பத்தை கடக்கும் வரை 

மீனுண்ணும் தாய்மீனின்
முட்டைக்குள் மீண்டும் கருவாகுமோ
முன் கொண்ட மகவு 

பொற்கோழியோ
நற்காகமோ 
அடைகாக்க மட்டும் 
அறிந்தவை பறவைகள் 

லோகிதாசனின் பிணக் கூலியாய் 
அன்பு
காணப் பெறும் கண் சார்ந்து 

தனதன்பை பகடி செய்தவர்களிடம்
தரவும் புத்தனிடம் 
ஒரு புன்னகையே இருந்தது

Saturday, October 1, 2011

முத்தம்

தாள் துளைப்பானின்
கர்ப்ப சேமிப்பாய் எத்தனைப் பௌர்ணமிகள்
காத்திருப்பு ஓர் முத்தத்தின் நிமித்தம்

உதிரங்கசியும் கள்ளிப் பழச் சுவை
கூதிர் காலத்து உதட்டில்

ஆலங்கட்டி மழைக்குப் பின்னான
பூங்கொத்து அங்காடி

X வடிவ அலுவல் அவசர முத்தங்கள்
பசிக்கு திறந்து கீச்சிடும்
அந்திக்கூட்டின் பிஞ்சு அலகுகள்

Y கவ்விய முத்தத்தில்
மிருதங்கத்துள் தவறி
நுழைந்த எறும்பென உடல்களிடையே
கேரம்போர்டின் சிவப்புக்காய்
ஆகும் துணை கேட்கும் உயிர்

சகி
முத்தம் தொலைநகல்
பிரதிப்படாவிடில் தேய்ந்தழியும்

Saturday, September 17, 2011

நான் பிணவறைக் காப்பாளன்



நானொரு பிணவறைக் காவலன்
தனித்திருக்கும் நேரமெல்லாம் காமுற்று இருப்பேன்
தற்கொலை பெண்கள்,நடிகைகள் பிரேதம்
சாலையோரப் பிணங்கள், காவல் அறை மரணங்கள்
தீக்குளித்த உடல்கள்
உயிர் பிரிந்திருக்கும் வழிகள் ,வலிகள் ,உறைந்த புன்னகைகள்
தூக்கிலிட்ட உடல்களில் இருந்து வழிந்திருக்கும் விந்து
பெண்களுக்குள் உறைந்த விந்து
சீழ் நுதல் நாற்றம் நரை
திறந்த விழிகள் மடங்காத விரல்கள்
வளரும் நகம் வளரும் மயிர்
புணர்ச்சி கீறல் காயம் மாயம்
காசு மாசு லஞ்சம்
ரச்புடின் பிரகாஷ்
கர்ப்பவதி கைம்பெண்
நீரால் காரால்
ஊழி மூளி
நான் பிணவறைக் காவலன்

பிணங்களே இல்லாத நாளில்
நான் தற்கொலை செய்து கொள்ளக் கூடும்
முன்குறிப்புகளோடு