நீ தட்டானாகி அமர்ந்து
சிறகு குவிக்கும் புல்
உன்னைப் புதைத்த கல்லறை
நீ புகட்டி வளர்த்த கனவுகள்
உனக்கெதிரான சாபங்களாய்
செல்பேசி எறிந்து
பேட்டரிகளாய் கழன்று கொண்டிருக்கின்றன
உனது புகைப்படத்தின் ஓரங்கள்
பழுப்பேறி விட்டன
உனக்குத்தெரியுமா
நீ போற்றி மறைத்த நரை
தெள்ள வெளுத்த தருணக் காட்சியுடைய
படம் அது
உனக்கு எப்படி புரிய வைப்பது
நீ இறந்து விட்டாய்
வாழ்வைப் பிணை வைத்த
ஒரு நம்பிக்கை பொய்க்கும் போது
இல்லாமலே மரிக்கும் கடவுளைப் போல
போல போன்ற எல்லா போலகளும்
அழிந்து விடும்
விற்கப்பட்ட சிறுமியின்
பிறப்பைப் போல
ஒரு ஆழ்ந்த காயத்தின்
தையலாய்
பிரிக்கப் பட்டு விட்டாய்
நீ
உனக்கு எப்படி புரிய வைப்பது
அதன்பின் நானும் இரண்டு முறை
இறந்து விட்டதை
( என்றும் )
அல்லது ..
இந்த கிரகம் இனி நமதல்லவென்பதை
( என்றும் )
கழிவறைக் கூடையில்
உன் அதீத அன்பு கருமையேறி
வில்லைகளால் பின்னமுற்ற நாளில்
( விரும்பியவாறு வாசித்து முடிக்கலாம் தலை கீழாய் எழுதப்பட்ட இந்தக் கவிதையை.. )
:)
3 comments:
NALLAAYIRUKKU...
MITHRAN SIR
இப்படிப் புரிகிறாற்போல எழுதினால், நேசமித்ரன் நீர்த்துப்போனதாக எண்ணமாட்டார்களோ? அல்லது மொழியில் இல்லை கவிதை, எய்தலில்தான் இருக்கிறது என்று ஏதேனும் தெளிவா?
இதிலும், 'பின்னமுற்ற நாள்' என்பது இன்னதென்று புரியாமற் சற்றுக் குழம்பினேன், 'பின்னல்', 'பின்னர்' போன்ற ஒத்த ஒலிச் சொற்கள் மூளைக்குள் முண்டியடித்தன. பிறகுதான் இது ஸம்ஸ்க்ருதம் அல்லவா என்னும் தெளிவு புலர்ந்தது. 'சிதைவுற்ற நாள்' என்றிருந்தால், கூற வந்ததில் எதாவது குறைவுபட வாய்ப்புள்ளதா?
அட....நேசன் புரியிறமாதிரி ஒரு கவிதை உங்க பக்கத்திலயும் !
காயம் ஆறி வடுவாகிவிட்டாலும் உள்புண் மாறாத வலியோடு வரிகள்.தலைகீழானாலும் சரி நேராகவும் சரி உணர்வுகள் அப்படியேதான் !
Post a Comment